யாழில் 33 வயதான பெண் குத்திக்கொலை ; சந்தேக நபரும் ரயிலில் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் ரயில் கடவைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கத்தி குத்துக்கொலைச் சம்பவத்தில் 33 வயதான பெண் உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான 22 வயது இளைஞன் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (5) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் என்ற 33 வயதான இளம் குடும்பப் பெண் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தேவதாஸ் புகழரசன் என்பவர், குறித்த பெண்ணையும் அவரது தாயாரையும் குத்திக் காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து அருகிலுள்ள ரயில் பாதை வழியாக புங்கங்குளம் நோக்கிச் சென்ற அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கொலைக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.