உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தியெடுத்ததை அடுத்து, 31 மாணவர்கள் இன்று (11) பகலில் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணை
இதில் 27 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிற்றுண்டிச்சாலையை நடத்திவந்த பெண் உரிமையாளர் பொலிசில் சரணடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் இன்று காலை இடைவேளை நேரத்தில் மாணவர்கள் இடியப்பம், புட்டு, இட்டலி, நூடில்ஸ் ஆகிய உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.
பகல் ஒரு மணியளவில் உணவு சாப்பிட்ட பல மாணவர்கள் வாந்தியெடுக்கத் தொடங்கியதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
வாந்தியெடுத்த மாணவர்களை கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதித்தனர். தரம் 6 முதல் 10 வரையிலான ஆண், பெண் மாணவர்கள் உட்பட 31 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பலருக்கு மயக்க நிலையும் தொடர் வாந்தியும் ஏற்பட்டதால், 27 மாணவர்கள் மூன்று நோயாளர் காவு வாகனங்களில் மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
பொது சுகாதார பரிசோதகர்களின் சோதனையில், பழுதடைந்த நூடில்ஸ் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிற்றுண்டிச்சாலை உரிமையாளரான பெண் பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.