மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாட்டால் கடும் அதிருப்தியில் மக்கள்
மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

கடும் விசனம்
மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது எங்களை ஒதுக்கி எமது எதிர்கால சந்ததியினர் அந்த வீதியால் பிரயாணிக்க முடியாமல் செய்யும் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் விஸ்தரிப்பு உடன் நிறுத்த வேண்டும் என அந்த வீதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வாகனங்களில் வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக நீண்ட காலமாக மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வாகன தரிப்பிடம் இந்த வருடம் 75 இலட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் விஸ்தரிப்பு நடவடிக்கையினை மாநகரசபை மேற்கொண்டு வருகிறது இந்த விஸ்தரிப்பினால் அந்த வீதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்கள் பிரயாணிக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே இந்த வீதியில் அமைக்கப்பட்ட இந்த வாகன தரிப்பிடத்தால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மீண்டும் இந்த வாகன தரிப்பிடத்தை விஸ்தரிப்பது இந்த வீதியில் சுதந்திரமாக குடியிருந்து வரும் எங்களை எடுக்கும் செயலாகும்
எனவே குறித்த வாகன தரிப்பிடத்தை தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரிப்பதை நிறுத்தி எங்களை சுதந்திரமாக வாழ வழி செய்யவும் என அவர் தெரிவித்தார்.