இலங்கை சிறைகளில் இருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02) நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் வெவ்வேறு காலப்பகுதிகளில் கைது
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் வெவ்வேறு காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பின்னர் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிவான் உத்தரவின் பேரில் நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்டநாட்களாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, நீதிமன்றங்களினால் நிபந்தனையடிப்படையில் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.