எரிபொருள் பற்றாக்குறை பேருந்து சேவைகள் இரத்து; இடைநடுவில் பயணிகளை தவிக்க விட்ட இ.போ.ச
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாகாணங்களுக்கிடையில் நாளாந்தம் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் 250 தனியார் பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சரத் விஜித் குமார தெரிவித்தார்.
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பேருந்துகளை முழுமையாக சேவையில் ஈடுப்படுத்த முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் 3200 தனியார் பேருந்துகளில் தற்போது 2000 ஆயிரம் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன.
இதன்படி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாகாணங்களுக்கிடையில் நாளாந்தம் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பேருந்துகளில் 250 பேருந்துகளின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை டீசல் இல்லாத காரணத்தினால் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று களுத்துறை நகரின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகத் தெரியவருகிறது.
அத்துடன் பஸ் நிற்கும் நேரத்தில், அங்கு 80 பேர் இருந்ததால், அவர்களை வேறு பஸ்களில் திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், களுத்துறை டிப்போவில் இருந்து டீசல் கொண்டுவரப்பட்டு பேருந்து இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.