திருக்கோணேஸ்வர ஆலய காணிகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு
திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் பல காணி பகுதிகளை உறுதிப்படுத்தி, அவற்றிற்கு பாரதீனப்படுத்தல் கட்டளை (Vesting Order) வழங்க கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலைமையில், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த 2026 ஏப்ரல் 29ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில், திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலை உள்ளிட்ட 18 ஏக்கர் 1 ரூட் 29 பேர்ச்சஸ் காணி, பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 3 ஏக்கர் 2 ரூட் 1 பேர்ச்சஸ் காணி, மேலும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைந்துள்ள 26 பேர்ச்சஸ் காணி ஆகியவை ஆலயத்துக்குச் சொந்தமானவை என அறிவிக்க கோரப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டிலிருந்து காலந்தோறும் ஏற்பட்டதாகக் கூறப்படும் அரச மற்றும் தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாடுகள், அத்துமீறிய கையகப்படுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தி, ஆலயத்தின் ராஜகோபுரம் கட்டுமானம் மற்றும் பிற அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவையாலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை தெரிவித்துள்ளது.