ஆழிப்பேரலை 21 ஆண்டுகள் பூர்த்தி
நாட்டில் ஆழிப்பேரலை பேரழிவினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பல்வேறு அனர்த்தங்களால் நாட்டுக்காக உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நாளை (26) காலை நாடு தழுவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை முற்பகல் 9.25 முதல் 9.27 மணி வரை இந்த மௌன அஞ்சலியை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட 21 ஆண்டுகள் பூர்த்தி
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரழிவினால் இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
அத்துடன், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்தன. இதனைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 'தேசிய பாதுகாப்பு தினமாக' பிரகடனப்படுத்தப்பட்டு அன்று ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு காலி, "பெரேலிய சுனாமி நினைவிடத்துக்கு" அருகில் நாளை காலை 8.30 முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.
"டிட்வா" (Ditwah) சூறாவளி பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார சூழலைக் கருத்திற்கொண்டு, மாவட்ட மட்டத்தில் சர்வ மத வழிபாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் உயிரிழந்த உறவுகளுக்கு ஆசி வேண்டவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இந்த விசேட பிரார்த்தனைகள் அமையவுள்ளன.
அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் முன்னெடுக்கப்படும் இந்த மௌன அஞ்சலியில் அனைத்து பொதுமக்களையும் பங்கெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.