புதைந்து கிடக்கும் 2000 டன் தங்க குவியல் ; உலகையே மாற்ற போகும் சீனா
சீனா தனது நாட்டில் புதைந்து இருக்கும் தங்க இருப்புகளை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே வெறும் சில மாத இடைவெளியில் தனது நாட்டில் புதைந்துள்ள 2000 டன் தங்க இருப்பை சீனா கண்டறிந்துள்ளது.
இரு வேறு மாகாணங்களில் புதைந்து கிடக்கும் இந்த தங்கம் முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டால் அது சீனா பொருளாதாரத்தையே மொத்தமாக மாற்றும் என நம்பப்படுகின்றது.
2000 டன் தங்கம்
இதற்கிடையே சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இப்போது மாபெரும் தங்க குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய தங்க இருப்பு, கிழக்கிலிருந்து மேற்காக 3,000 மீட்டருக்கும் அதிகமாகவும், வடக்கிலிருந்து தெற்காக 2,500 மீட்டருக்கும் அதிகமாகவும் பரவியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த இடத்தில் சுமார் 1000 டன் தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
அதன் மதிப்பு சுமார் பல லட்சம் கோடியாகும். அதேநேரம் சீனாவில் சமீப காலங்களில் இதுபோன்ற மாபெரும் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 டன்களுக்கு மேல் கொண்ட தங்க இருப்பு கண்டறியப்பட்டது.
இது சீனாவுக்கு அடித்துள்ள மாபெரும் ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேற்குலக நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் சீனாவின் கண்டுபிடிப்பு குறித்து சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். தங்க இருப்பு இருக்கலாம் என்ற போதிலும் 1000 டன் என்ற அளவுக்கு ஒரே இடத்தில் குவிந்து இருக்க வாய்ப்பு குறைவு என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.