கொழும்பு - மெல்பேர்ன் விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்
ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் , கொழும்பு மற்றும் மெல்பேர்ன் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அந்தநாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக புதிய விமானங்கள்
இந்த புதிய அட்டவணை எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போதுள்ள தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக, வாரத்தில் மூன்று நாட்கள் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
கொழும்பிலிருந்து பிற்பகல் 14:10 மணிக்கு புறப்படடும் விமானம் மறுநாள் அதிகாலை 04:30 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.
மெல்பேர்னில் இருந்து காலை 06:00 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
இதனூடாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்காக தாய்நாட்டுக்கு வந்து செல்ல கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள், விடுமுறை காலங்களில் நாட்டிற்கு வந்து செல்வதற்கு இந்த சேவை அதிகரிப்பு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.