இணையவழி மோசடியில் மேலும் 20 சீன பிரஜைகள் கைது
நாட்டில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
விசாரணைகளில் , விசா இன்றி 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் அவர்கள் பாணந்துறை விடுதியில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
5 மடிக்கணினிகள், 437 கைபேசிகள், 332 USB கேபிள்கள் மற்றும் 17 ரவுட்டர்கள்
அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கைபேசிகள், 332 USB கேபிள்கள் மற்றும் 17 ரவுட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை அண்மையில் நாவல பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அதற்கு முன்னர் ஹங்வெல்ல பகுதியிலுள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகளும், 4 இந்தியர்களும் 6 தாய்லாந்து பிரஜைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.