’ஒரேயொரு எம்.பிக்கே வாகனம் ; பிரதமர் ஹரினி சுட்டிக்காட்டு
10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு வாகனங்கள் அவசியமாக உள்ளது என்றும், செலவுகளை குறைத்து வாகனங்களை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினைகளும் தமக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை கூறினார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்றும், அவை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள என்றும் சாமர சம்பத் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் கூறுகையில், 10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
அவர் பார்வையற்ற பாராளுமற்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் அவருக்கு உதவும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது மேலதிக கேள்விகளை எழுப்பி உரையாற்றிய சாமர சம்பத் எம்.பி கூறுகையில்,
பிரதமர் இவ்வாறு கூறினாலும் மாதிவெலவில் வாகனமொன்று உள்ளது. நீங்கள் பிரதமராக கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் ரேஞ்ச் ரோவர் வாகனமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் உளளது. வீ8 வாகனத்தை விடவும் ரேஞ்ச் ரோவருக்கு செலவு அதிகமாகும். அவரின் பெயரை வேண்டுமென்றால் கூறுகின்றேன்.
அவர் வசந்த சமரசிங்கவே. அத்துடன் எனது மேலதிக கேள்வியாக ஒரு விடயத்தை கேட்கின்றேன். பிஎச் 1208 என்ற இலக்கமுடைய வாகனமொன்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது உங்களின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இருக்கின்றது. அவரின் பெயரை கூறப் போவதில்லை. பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் புல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றது. இது தொடர்பான விடயத்தை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
பசறை ஒருங்கிணைப்பு குழுவுக்கு குறித்த வாகனம் வந்துள்ளது. லுனுகல ஒருங்கிணைப்பு குழுவுக்கும் மற்றும் மாவட்ட கூட்டத்திற்கும் வந்துள்ளது. பதுளை மாவட்டத்திலேயே குறித்த எம்.பியினால் அந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.
இதில் புல்லு கட்டுகளை ஏற்றுகின்றனர். இது அரசாங்கத்திற்கு சரியில்லை. இப்படி இருக்கையில் நீங்கள் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றீர்கள். இதன்போது பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, அதனை எனக்கு அனுப்புங்கள் தேடிப்பார்கின்றேன்.
உங்களுக்கு அல்ல எமது கட்சியில் ஒழுக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். அதனால் அதனை தாருங்கள் தேடிப்பார்க்கின்றேன் என்றார்.