வெளிநாட்டிலிருந்து வந்த 19 வயது மாணவன் இலங்கையில் அதிரடி கைது
சுமார் 92 இலட்சத்து 22 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள், இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் பாரிய அளவிலான தொலைக்காட்சி ஒன்றினைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட 'சிவப்பு வழி' ஊடாக இப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்றபோதே, இன்று (04/26) அதிகாலை விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.

19 வயது மாணவர்
கைது செய்யப்பட்டவர் கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கடந்த 24-ஆம் திகதி டுபாய்க்குச் சென்றுவிட்டு, இன்று (26) அதிகாலை 02.00 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, வெளிநாட்டு சிகரெட்டுகள் 55,600 அடங்கிய 278 கார்ட்டூன்கள்.70 இலத்திரனியல் சிகரெட்டுகள், 55 அங்குலத் திரை கொண்ட ஒரு பாரிய தொலைக்காட்சி போன்றன கைப்பற்றப்பட்டன.
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த பயணி மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.