முதலமைச்சர் விஜய் தலைமையில் 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீட்டு உறுதிமொழிகள் ; தமிழகத்தில் புதிய சாதனை
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 200 நாட்களுக்குள் சுமார் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்றத்திற்கான மாநாட்டில், 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் (58,214 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று (25) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் ஊடாகத் தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மொத்தம் 65,786 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுவரை 190 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
இவற்றின் மூலம் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இலத்திரனியல் உற்பத்தி, குறைக்கடத்திகள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் இந்த முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியை விரிவுபடுத்துவதுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்டுள்ள தொகைகள் முதலீட்டு உறுதிமொழிகளை மட்டுமே குறிக்கின்றன.
குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையைப் பொறுத்தே உண்மையான முதலீடுகளின் அளவும், எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.