குளிக்கும்போது மறைந்திருந்து புகைப்படம் ; இளைஞனின் அச்சுறுத்தலால் பறிபோன உயிர்!
கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி கடந்த வியாழக்கிழமை (1) தனது வீட்டில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
உயிரிழந்த சிறுமி உயிர்மாய்ப்புக்கு முன்னர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உயிர்மாய்ப்புக்கு முன்னர் எழுதிய கடிதம்
கடிதத்தில், தனது புகைப்படங்களை வைத்துக்கொண்டு அயல்வீட்டு இளைஞர் ஒருவர் தன்னுடன் தவறான உறவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், புகைப்படங்களை வேறு சில நபர்களுக்கும் அவர் அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, புதிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தன்னைத் தொடர்புகொண்ட ஏனைய நபர்களும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிட்டதாகக் கூறியதாக அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.
சிறுமி குளித்துக்கொண்டிருந்த வேளையில் அயல்வீட்டு இளைஞர் மறைந்திருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்ததாகவும், அந்த ஆபாசத் தகவல்களைக் காட்டி சிறுமியைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ச்சியான இந்த மன உளைச்சலும் மிரட்டல்களும் தாங்க முடியாத நிலையிலேயே சிறுமி இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
எனினும், இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் உயிர்மாய்ப்பு கடிதம் உள்ளபோதிலும், சம்பந்தப்பட்ட இளைஞனைப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து வாக்குமூலம் மட்டுமே பெற்றுக்கொண்டு உடனடியாக விடுவித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பொலிஸாரின் இந்த மெத்தனப்போக்கு காரணமாக சிறுமியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.