கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி!
கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளனர்.
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் , கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, பொலிசார் குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
அச்சத்தில் அழுத மாணவர்கள்
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 - 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றவும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உணவின்றி பிள்ளைகளை அடைத்துவைத்த பொலிஸார்
கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது சிறுவர்கள் பயத்தில் அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாலை நான்கு மணி வரை மதிய உணவின்றி சிறுவர்களை பொலிஸார் பாடசாலையின் அறையில் அடைத்து வைத்த நிலையில் , பெற்றோர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
“பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், எனவே அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு பொலிஸார் நடந்துகொள்ள வேண்டும்” என பொலிஸாருக்கு வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, சிறுவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பெற்றோர் இந்த பிரச்சினையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.