2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை
இந்தியாவின் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தில் இரண்டு வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தைத் தட்டிக்கேட்கச் சென்ற சிறுமியின் தந்தை தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வி.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டு வயது பெண் குழந்தை வீட்டில் இருந்துள்ளது.
இதன்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளான்.
சிறுமியின் தந்தை மீது தாக்கதல்
தண்ணீர் குடித்த பின்னர் வீட்டிலிருந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கவனித்த சிறுமியின் தாய், குறித்த சிறுவனைக் கண்டித்து வீட்டிலிருந்து வெளியே அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய தனது கணவரிடம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாய் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை சிறுமியின் தந்தை, குறித்த சிறுவனின் வீட்டிற்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதன்போது, சிறுவனும் அவரது பெற்றோரும் இணைந்து சிறுமியின் தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை சிறுவர் பாதுகாப்பு உதவி இலக்கமான 1098 ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி, அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செஞ்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.