போதைப்பொருளுடன் 14 பேர் கைது
ஹிங்குரக்கொட பகுதியில் ஹெராயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிங்குரக்கொட பொலிஸாரும் ஹிங்குரக்கொட விமானப்படைத் தள அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மின்னேரியாவையும், 3 பேர் ஹிங்குரக்கொடவையும், இருவர் மெதிரிகிரியாவையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஹெராயின் போதைக்கு அடிமையான இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிங்குரக்கொட 6ஆவது மைல்கல் பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர், வட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு ஹெராயின் விநியோகிக்கும் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹிங்குரக்கொட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.