இணைய மோசடி வலையமைப்பு சிக்கியது ; அதிரடியாக கைதான 134 வெளிநாட்டவர்கள்
அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது, இணையவழி நிதி மோசடிகளில் (Online Scam) ஈடுபட்ட குற்றச்சாட்டில் 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஐந்து தங்குமிடங்களைச் சோதனையிட்ட போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 126 சீனப் பிரஜைகளும், தலா நான்கு மியான்மார் மற்றும் தாய்வான் பிரஜைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பெருமளவிலான மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.