கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்
சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை, இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) கைப்பற்றியுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினர், கடலோரக் காவல்படையினருடன் இணைந்து இன்று காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டைகளைச் சோதனையிட்டனர்.

இதன்போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.