சாமியாரை தரிசிக்க சென்ற 121 பேர் உயிரிழப்பு; கூட்ட நெரிசலால் துயரம்
சாமியாரை தரிசிக்க சென்ற 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா (Bhole Baba) என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆன்மிக சொற்பொழிவு
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா (Bhole Baba) பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
யார் இந்த போலே பாபா(Bhole Baba)?
‘போலே பாபா’ (Bhole Baba)என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். அதோடு இவர் உத்தரப் பிரதேச காவல் துறையின் உளவுத் துறையில் பணியாற்றிவர்.
இதுவரை 10 லட்சத்தைத் தாண்டும் எண்ணிக்கையில் போலே பாபாவின் (Bhole Baba) பக்தர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தனது கூட்டங்களை போலே பாபா அந்தந்த பகுதியிலுள்ள சீடர்கள் மூலம் நடத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும், தனக்கு கிடைக்கும் நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்களை பிரச்சாரக் கூட்டங்களில் பக்தர்களுக்கே வாரி வழங்கி விடுவதும் இந்த பாபாவின்(Bhole Baba) பாணியாக உள்ளது. இதுவே, பாபாவின் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணம் எனவும் கூறப்படுகின்றது.