நொறுக்குத் தீனியால் அடிபாடு; 14 வயது சிறுவனை கொலை செய்த 12 சிறுவன்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 14 வயது சிறுவனை 12 சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். குறித்த இரு சிறுவர்களும் ஒரே பாடசாலையில் 8 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததால் நெருக்கமாக பழகியுள்ளனர்.
5 ரூபாய் மதிப்பிலான நொறுக்குத் தீனி
விளையாடிக் கொண்டிருந்த போது 5 ரூபாய் மதிப்பிலான நொறுக்குத் தீனியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியை எடுத்து வந்து, எட்டாம் வகுப்பு மாணவரை கண்மூடித்தனமாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், ஆறாம் வகுப்பு மாணவரை கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.