பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாடசாலை கழிப்பறையில் குழந்தையை பிரசவித்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாடசாலையில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, 10ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கழிவறைக்கு சென்றார்.
மேலதிக விசாரணை
ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால் சந்தேகமடைந்த தோழிகள் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் கழிவறையைச் சென்று பார்த்தனர்.

அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்கப்பட்டதால், மாணவி கழிவறையிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக மாணவியும் புதிதாக பிறந்த குழந்தையும் நோய் காவு வண்டி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மாணவி சுமார் 34 வாரங்கள் (எட்டு மாதங்கள்) கர்ப்பமாக இருந்ததும், குழந்தை முன்கூட்டியே பிறந்ததும் உறுதியாகியுள்ளது.
மேலும் விசாரணையில், நடன நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான மாணவன் ஒருவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.