100 பாடசாலைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ; அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகளில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில பாடசாலைகள் தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைத்துள்ள முகாம்களாக செயற்படுகின்றன.

இந்த நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், அது குறித்தும் ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்.