வடக்கில் தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாமல் சுற்றித் திரியும் ஒரு லட்சம் பேர்!
வடக்கு மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளவில்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களும் சடுதியாக அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இதுவரை 32 ஆயிரத்து 844 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், அவர்களில் 14 ஆயிரத்து 480 பேர் ஓகஸ்ட் மாதத்திலும், 5 ஆயிரத்து 847 பேர் செப்ரெம்பர் மாதத்தில் முதல் 12 நாள்களிலும் தொற்றுடன் இனங்காணப்பட்டனர் என்று கூறினார்.
வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் 578 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஓகஸ்ட் மாதம் 228 இறப்புக்களும், செப்ரெம்பர் மாதத்தில் 169 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா இறப்புக்களில், பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எதையும் ஏற்றிக்கொள்ளதவர் என்று சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பின்னிற்க வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.