இலங்கையில் 1772 சிறுவர்களும், 81 சிறுமிகளும் கைது ; வெளியான அதிர்ச்சி தகவல்
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 412 பேர் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1772 சிறுவர்களும், 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அழிப்பு
கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
அத்துடன் இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.