இலங்கையில் நேர்ந்த சம்பவம் ;14 போலி மாணிக்கக் கற்களுடன் 06 சந்தேக நபர்கள் கைது
கண்டியில்13.5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த 14 போலி மாணிக்கக் கற்களுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி , ஹினிதும மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் இருவர் மோட்டார் சைக்கிள் மூலம் இந்த போலி மாணிக்கக் கற்களைக் கண்டி பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த மாணிக்கக் கற்கள் போலியானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவற்றைத் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கற்களைப் பரிசோதிக்கும் இயந்திரம் மற்றும் மாணிக்கக் கல் சான்றிதழ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணிக்கக் கல் சான்றிதழும் போலியானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அதனைத் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.