வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞன் படுகொலை ; இரவில் நடந்தேறிய பயங்கரம்
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலைக்கான காரணம்
இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் பியகமை பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த அறைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதைக் கண்டு, அவர் அறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இதன்போது, முகத்தை மூடியவாறு வந்த இருவர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலையைச் செய்த சந்தேகநபர்களோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.