விசேட சோதனையில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞன்
பொரலஸ்கமுவை, லேக் வீதி பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 23.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், ஒரு வாள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கை
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரதான பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சார்பில் உள்ளூர் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இவர் நடத்தி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதங்களுடன் வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர், நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞனுக்கு எதிராகக் கடத்தல், தாக்குதல் நடத்துதல், கூர்மையான ஆயுதங்களால் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொரலஸ்கமுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.