தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.

ரகசிய தகவல்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி திருடப்பட்டிருந்தன.
அந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போது, விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது.
விசாரணைகள் முடிவடையும் வரை அவை பராமரிப்பிற்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளதாக நிர்வாகத்தினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.