வத்தளையில் இரு பிள்ளைகளின் தந்தை கொலையில் இளைஞன் கைது
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வத்தளை அவரகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வத்தளை - ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளது.
இளைஞனிடமிருந்து 4 வாள்கள்
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் வத்தளை அவரகொட்டுவ பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் (4) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 4 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.