வெளிநாடு செல்லவிருந்த இளம் தமிழ்ப் பெண் இலங்கையில் உயிரிழப்பு! அதிர்ச்சி பின்னணி
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவர், கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் ஆறு மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாடியில் இருந்து கீழே விபத்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (09) அதிகாலை 2.40 மணியளவில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் இலங்கைக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இருவரும் கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததுடன், குறித்த இளைஞனும் கடந்த வருடம் சுவிஸ்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார்.
முகநூல் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த பெண் நாளை அதிகாலை மீண்டும் பிரித்தானியாவிற்கு செல்லவிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில்,
நேற்றிரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் நேற்றிரவு சுமார் 6 பியர் கேன்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டார்.
நாளைய தினம் (10-09-2023) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.