கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ ; நாடாளுமன்றில் விஜய் குறித்து விவாதம் !
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (6) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அநுர போலவே விஜய்யும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதி
இதன்போது, தற்போதைய அநுர அரசாங்கத்தைப் போலவே, விஜய்யும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதியை அளித்து, தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாளை அல்லது நாளை மறுதினம் விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை. அந்த அம்மாவின் (இந்திரா காந்தி) புண்ணியத்தில் பெற்றுக் கொண்ட கச்சத்தீவும் தற்போது இல்லாமல் போய்விடுமா எனத் தெரியவில்லை" என்று அவர் நகைச்சுவையாகவும் கவலையுடனும் தெரிவித்தார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் விஜய்யின் இந்த அரசியல் நகர்வுக்கு வாழ்த்துகளையும், வேறு சில உறுப்பினர்கள் அவரின் அரசியல் செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.