யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞன் ; இறுதியில் நேர்ந்த சோகம்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யூடியூப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதன் காரணமாக அவருக்கு முன்னதாக ஒருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவருக்கு வயிற்றுவலி குறைவடையவில்லை. வைத்தியசாலைக்குச் சென்று தீர்வு கிடைக்காத காரணத்தால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.
யூடியூப் மூலம் அறுவை சிகிச்சை
இதற்காக யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை பார்த்து வயிற்றுவலியுடன் தொடர்புடைய குறிப்புகளை தேடிக் கண்டறிந்துள்ளார். அத்தோடு அறுவை சிகிச்சை செய்யும் முறையையும் காணொளியில் பார்த்துவிட்டு தனது வீட்டின் அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் தனது வயிற்றில் 7 செ.மீ அளவிற்கு கீரியுள்ளார்.
எதிர்பாராத விதமாக அவரது வயிற்றில் கத்தி ஆழமாக வெட்டியுள்ளது. இதனால் அவருக்கு இரத்தம் வந்துள்ளது. இதனை சரிசெய்ய முயன்ற குறித்த இளைஞர் வெட்டப்பட்ட இடத்தில் தையலிட்டுள்ளார்.
தவறான முறையில் தையலிடப்பட்டதன் காரணமாக இரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் கூச்சலிட்டுள்ளதாகவும் பின்னர் வீட்டிலிருந்தவர்கள் குறித்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.