படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண் ; விசாரணைகளால் அம்பலமாகும் தகவல்கள்
கண்டி, குண்டசாலை, வரப்பிட்டியாவைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான இளம் பெண்ணின் சடலம், இன்று (20) அதிகாலை அவரது படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளம் குடும்ப பெண் அவர் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இளம் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடயவியல் பரிசோதனை
விசாரணைகளின்போது , அவரது கணவர் ஒரு இசைக் கச்சேரிக்குச் சென்றதாகவும், இன்று காலை வீடு திரும்பியபோது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவளது உடலைக் கட்டிலில் வைத்ததாகவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த இளம் குடும்ப பெண்ணின் உறவினர்கள், அவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், போதைக்கு அடிமையான கணவர் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்துவதாக பொலிஸில் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் உயிரிழந்த இளம் குடும்ப பெண் கணவரை விவாகரத்து செய்யத் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து, தங்கள் மகளுடையது அல்ல என்று அப்பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த இளம் குடும்ப பெண்ணின் உடலை தடயவியல் பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாலகொல்ல பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.