யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே நின்றிருந்த இளைஞரை கார் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, நாவற்குழி பகுதியில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞரை மீண்டும் காரில் அழைத்து வந்து, யாழ்ப்பாணம் போஸ்கோ கல்லூரி அருகே வீதியோரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அருகில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவதானித்ததைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
காரைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு கூரிய வாள்கள், இரத்தக் கறை படிந்த டி-ஷர்ட் மற்றும் சுமார் 2.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், காரின் உட்பகுதியிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வீதியோரத்தில் காயமடைந்த நிலையில் கிடந்த இளைஞரை பொலிஸார் மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.