இலங்கையில் தந்தம் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் யானைகளின் இனப்பெருக்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, தந்தம் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 8.4 சதவீதமாக இருந்த இளம் ஆண் யானைகளின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டில் 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 9.2 சதவீத அதிகரிப்பாகும்.

அரசாங்கம் எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சி
முன்னதாக 1993 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11 சதவீதமாகக் காணப்பட்டது.
இலங்கையிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் தந்தம் கொண்ட யானைகளின் சதவீதம் 2021 முதல் 2024 வரையான காலப்பகுதியில் 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 5,879 ஆகக் காணப்பட்ட இலங்கையின் மொத்த யானைகளின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டில் 7,451 ஆக அதிகரித்துள்ளது.
யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மனித-யானை மோதல்களைக் குறைக்கவும் அரசாங்கம் எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் தரவுகள் அமைந்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.