தமிழரசுக்கட்சிக்குள் அதிர்ச்சி தீர்மானம் ; சிறிதரனை விலகச் சொன்ன அரசியல் குழு
அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உடனடியாக விலக வேண்டும் என பணிப்புரை விடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
வவுனியா - குருமன்காட்டில் அமைந்துள்ள ‘தாயகம்’ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புப் பேரவையில் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாக சிறிதரன் வாக்களித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கணக்காய்வாளர் நாயகம் நியமனத்துக்கான வாக்கெடுப்பில் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு இராணுவத் தரப்பைச் சேர்ந்த இருவரைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவளித்தமை என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன், அவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனங்களில் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் போது, கட்சியைச் சேர்ந்த ஒருவரே அதற்கு முரணாகச் செயற்படுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கட்சியினதும் அவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவரை அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலகுமாறு பணிப்புரை வழங்க தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.