தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு இலங்கை தமிழர்கள் சட்டவிரோத படகு மூலம் வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தனுஷ்கோடி பொலிஸ் அதிகாரிகளுக்கு சில இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை சேர்ந்த 2 நபர்கள் ஈரோடு பகுதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து சட்டவிரோதமான முறையில் கள்ள படகு மூலம் இலங்கை செல்ல உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனுஷ்கோடி பொலிஸார் இன்றையதினம் (10-01-2025) அதிகாலை முதல் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஜோடியை பிடித்த விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த டிரோஷன் மற்றும் சஹானா என தெரியவந்தது.
குறித்த ஜோடி ஏற்கனவே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் எனவும், மீண்டும் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் கடல் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் எதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டனர்.
ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டார்களா மேலும் இவர்கள் மீது வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பொலிஸார் தீவிர விசாரணையை நடாத்தி வருகின்றனர்.