தமிழக திரை இசைத்துறையில் யோகானியா? ஒருபோதும் அனுமதிக்க முடியாது; போர்க்கொடி தூக்கும் இந்து மக்கள் கட்சி
அண்மையில் பிரபல்மடைந்த இலங்கை பாடகி யோகானி டி சில்வா , தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடல், உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யம் அடைந்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர் தமிழக இசைத்துறையில் வந்து பாடுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
அதேவேளை ஈழத்தின் இசைப்பாடகியாக இருந்த இசைப்பிரியா போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு, பல ஆலயங்களும் அழிக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தவரின் மகளான யோகானி , தமிழக இசைத்துறையில் பாடுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.