யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவைப் பெற தகுதியான குடும்ப எண்ணிக்கை அறிவிப்பு
யாழில் இரண்டாயிரம் ருபா கொடுப்பனவை பெற 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெறுவார்களென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டைத் தற்காலிகமாக மூடியமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரண்டாயிரம் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் குறித்த கணிப்பீடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை குறித்த விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் கொழும்புக்கு அனுப்பவுள்ளோம்.
விரைவில் குறித்த நிவாரண நிதியினைக் கையளிக்கக்கூடியதாக இருக்கும். இதனைப் பெறுவதற்கு 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றிருப்பதாக கருதப்படுகிறார்கள். இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றுக்கான அனுமதியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வருகின்றனர். இது தொடர்பாக நாம் கலந்தாலோசித்து நாளை முடிவொன்றை எடுப்போம்.
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுகின்றது. இன்றைய தினம் கிடைத்த தரவுகளின்படி 148 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 3019 குடும்பங்களைச் சேர்ந்த 8616 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர். யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,166 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 200 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழில் 30 வயதுக்கு மேல் 344,766 பேர் இனங்காணப்பட்டனர். அதில் நேற்றுவரை 283358 பேர் ஒரு டோஸையும், 104,009 பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர். அத்துடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் எழுந்து நடமாட இயலாத முதியவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவுகளை மேற்கொண்டு கொழும்பிற்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மிக அவசிய தேவைகளுடைய பொதுமக்களை தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
அத்தோடு பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.
தற்பொழுது வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் உணர்ந்து தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றார்.