காரடையான் நோன்பு 2025 : தீர்க்க சுமங்கலி வரம் பெற இப்படி வழிபடுங்க
பெண்கள் கடைபிடிக்கும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் நிறைவாக வரக் கூடிய மிக முக்கியமான விரதமாகும். இந்த விரதம் மங்கல விரதம் என பெண்களால் போற்றப்படும் விரதமாகும். இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தரும் மகா உன்னதமான விரதம் ஆகும்.
பொதுவாக மாசி மாதத்தின் நிறைவு நாள் மற்றும் பங்குனி மாதத்தின் துவக்க நாள் இணையும் நாளை தான் காரடையான் நோன்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மார்ச் 14ம் திகதி வெள்ளிக்கிழமை காரடையான் நோன்பு அமைந்துள்ளது.
மார்ச் 13ம் திகதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் திகதி பகல் 12.57 வரை பெளர்ணமி திதி உள்ளது. பெளர்ணமி திதி இருக்கும் சமயத்தில் வழிபட வேண்டும் என்பவர்கள் மார்ச் 14ம் திகதி காலையிலேயே பூஜை செய்து, தாலி சரடு அல்லது நோன்பு கயிற்றை கட்டிக் கொண்டு விரதம் இருக்கலாம்.
காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு என்பது கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வேண்டிக் கொண்டு திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஒரு உன்னதமான விரதம் ஆகும்.
இது சாவித்திரி விரதம், கெளரி விரதம், கெளரி நோன்பு, காமாட்சி விரதம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை திருமணமான பெண்கள் மட்டுமின்றி, நல்ல கணவன் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு திருமணமாகாத கன்னிப் பெண்களும் அனுஷ்டிக்கலாம். மிக உத்தமமான இந்த விரதம் மிக எளிமையானதாக இருந்தாலும், அதிக சக்தி வாய்ந்த விரதமாகும்.
காரடையான் நோன்பு வழிபாட்டு முறை
தன்னுடைய கணவரின் உயிர் உள்ளிட்ட இழந்த அனைத்தையும் சாவித்திரிக்கு திரும்ப கொடுத்தது அவள் இருந்த விரத மகிமையாகும். இந்த நாளில் நித்திய சுமங்கலியான அம்பிகையை வேண்டி விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காரடையான் நோன்பு இருப்பவர்கள் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு, கார அடை மற்றும் இனிப்பு அடை செய்து, படைத்து வழிபட வேண்டும். இலை போட்டு நைவேத்தியம் படைப்பதாக இருந்தால் 4 வாழை இலைகள் படைத்து வழிபட வேண்டும். ஒருவேளை தட்டில் வைத்து படைப்பதாக இருந்தால் கார அடை, இனிப்பு அடை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உருகாத வெண்ணெய் வைத்து படைத்து வழிபட வேண்டும்.
பூஜை நேரம் : மார்ச் 14 காலை 6 முதல் 07.50 வரை காலை 09.30 முதல் 10.20 வரை
தாலி சரடு கட்டும் நேரம் : மார்ச் 14 காலை 07 முதல் 07.20 வரை காலை 09.30 முதல் 10.15 வரை