இருளில் மூழ்கும் உலகம் ; அரிய கிரகணம் பற்றி உண்மையை விளக்கிய நாசா
சமூக வலைதளங்களில், இன்று (2) உலகம் 6 நிமிடங்கள் முழுமையான இருளில் மூழ்கும் என பரவும் தகவல் குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.
இது 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் அரிய நிகழ்வாக சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் இது தவறான தகவலாகும் எனவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பின்னணி சூரிய கிரகணமாகும். ஆனால், அடுத்த சூரிய கிரகணம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது – இது மிகச் சிறிய கிரகணமாகும்.
இதேவேளை, கடந்த 1991-ம் ஆண்டு பிறகு நிகழவுள்ள மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக மாறாது.
முக்கியமாக ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் மட்டுமே அதனை காண முடியும்.
இந்த கிரகணத்தின் போது முழு இருள் ஏற்படாமல், மாலை நேரத்துக்குச் சமமான மங்கலான வெளிச்சம் தான் இருக்கும் என்றும், இது பாதுகாப்பானதென்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.