நல்லூர் ஆலயத்திற்குள் குழப்பநிலை ; உலகக் கிண்ணத்தால் ஏற்பட்ட பரபரப்பு
20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தை எடுத்து சென்ற குழுவில் சிலர் பாதணிகளுடன் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்திற்குள் சென்றதால் அங்கு குழப்பநிலை உருவாகியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01.02.2026) வாகன பேரணியாக எடுத்து செல்லப்பட்டது.
அதனடிப்படையில், யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் குறித்த வெற்றிக் கிண்ணம் எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது, வெற்றிக் கிண்ணத்தை எடுத்து சென்ற குழுவில் சிலர் பாதணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினரால் பாதணிகளை அகற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆலய வளாகத்திற்குள் வைத்து, புகைப்படங்கள் எடுக்க முயன்ற போது ஆலய நிர்வாகத்தினரால் அதற்கு அனுமதி இல்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்திற்குள் இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருந்த போதிலும் உள்ளே சென்று புகைப்படங்களை எடுக்க முற்பட்ட நிலையிலேயே ஆலய நிர்வாகத்தினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, வெற்றிக் கிண்ணம் வெளியில் எடுத்து செல்லப்பட்டு பின்னர் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.