தமிழ் அரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் ; ஸ்ரீதரன் தெரிவிப்பு
தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசு கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று சனிக்கிழமை (12) விஜயதசமி விழாவும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள்.
தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எங்களது முழு செயற்பாடுகளையும் முன்னிறுத்தியிருந்தோம்.
குறிப்பாக, தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு. இந்த கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.
அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும். அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும். குறிப்பாக, தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி.
தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.
ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறுகின்றன. பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்றும் அந்த அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம்.
வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி இருக்கிறதா, இல்லையா என்பதற்கு அப்பால் இப்போதைய காலச் சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்கவேண்டும். அதுவே எனது நிலைப்பாடு என்றார்.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர்.