சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
156 ஆவது பொலிஸ் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பொலிஸ் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை பொலிஸ் திணைக்களம் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து சிறுவர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டும் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
கொழும்பு கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் இவ்வாறான ஸ்டிக்கர்கள் இன்று (5) ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘சிறுமிகளை போன்று சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தக்கூடும்’ ‘சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்’ ‘சிறுவர்கள் தொலைபேசியை பயன்படுத்தவது, இணையத்தை பயன்படுத்துவது தொடர்பில் அவதானமாக இருக்கவும்’ உள்ளிட்ட விடயங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களே பஸ்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.
அவசர தொடர்பு
119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011-2444444 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு சிறுவர் உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க முடியும் என்றும் பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு குறித்த ஸ்டிக்கரில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 எனும் அவசர தொலைபேசி சேவை அதேபோன்று 0112778911 மற்றும் 12 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் குறித்த ஸ்டிக்கர்களில் குறிப்பிட்டுள்ளது.