வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் நாட்டிற்குப் பணம் அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 10 ரூபா ஊக்குவிப்புத்தொகை வழங்கும் செயற்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடித்திருக்கும் இலங்கை மத்திய வங்கி, அவ்வாறு பணம் அனுப்பும்போது ஏற்படக்கூடிய பரிமாற்றல் செலவில் வரையறுக்கப்பட்ட தொகையைத் தாமே ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றது.
இதேவேளை, மத்திய வங்கியின் நாணயச்சபையினால் 'உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத்திட்டத்தின்' கீழ் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது அதற்கான ஊக்குவிப்புத்தொகையாக ஏற்கனவே ஒரு அமெரிக்க டொலருக்கு 2 ரூபா வீதம் வழங்கப்பட்டுவந்தது.
மேலும், இவ்வாறு ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 2 ரூபாவிற்கு மேலதிகமாக கடந்த முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய வழிமுறைகள் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு அமெரிக்க டொலருக்கான ஊக்குவிப்புத் தொகையாக 8 ரூபாவை வழங்குவதற்கு நாணயச்சபையினால் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இதுவரையான காலத்தில் (டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து) வெளிநாடுகளில் பணிபுரிவோரால் அனுப்பப்பட்ட பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்பட்டபோது ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் 2 ரூபாவிற்கு மேலதிகமாக, புதிதாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 8 ரூபாவையும் சேர்ந்து அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகையாக 10 ரூபாவை மத்திய வங்கி கொடுப்பனவு செய்துவந்தது.
இதேவேளை, இவ்வாறு மேலதிக ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் எமது நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவை அதிகரிக்க முடிவதுடன் அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணிச்சந்தையின் திரவத்தன்மையினை உயர்த்தமுடியும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மேற்படி ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பணவனுப்பல்களில் சிறந்த முன்னேற்றம் தென்படுவதனால், அதனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் பணப்பரிமாற்று நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்பும்போது, அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றல் செலவில் வரையறுக்கப்பட்ட தொகையைத் தாமே ஏற்றுக்கொள்வதற்கும் மத்திய வங்கி தீர்மானித்திருப்பதுடன் இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் எவ்வித செலவுமின்றியோ அல்லது குறைந்த செலவிலோ நாட்டிற்குப் பணத்தை அனுப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.