தலிபான்களின் பிடியிலிருந்து தப்பிய பெண்கள்; அடைக்கலம் கொடுத்த பிரபல நாடு
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமானதை அடுத்து, அங்கிருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகள் தமது குடும்பங்களுடன் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
‘நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து, விரைவில் பிரித்தானியாவுக்கு அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறினார்.
கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறிய 13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் சில வாரங்களாகத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களது தற்காலிக விசா இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர்களை வேறு நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பிரித்தானியா உதவிக் கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.