தமிழர் பகுதியொன்றில் கோர விபத்தில் சிக்கிய பெண்கள் ; பறிபோன உயிர்
புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள சிரம்பியடிய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் மன்னார் - எருக்கலம்பிடியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் 35, 46 மற்றும் 80 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
அநுராதபுரம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த கெப் வண்டி, அதே திசையில் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு கெப் வண்டியின் பின் பக்கமாக சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வண்டியின் பின் பக்கமாக இருந்த நான்கு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, படுகாயமடைந்த நான்கு பெண்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.