வெளிநாடொன்றில் குழந்தையுடன் சிக்கி தவிக்கும் இலங்கை பெண் ; அதிரடி காட்டிய அரசாங்கம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாக இலங்கைப் பெண் ஒருவர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் நேரடித் தலையீடு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொளி ஒன்றில், தானும் தனது குழந்தையும் அபுதாபியில் தங்கியிருப்பதாகவும், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் சட்டச் சிக்கல்களால் நாடு திரும்ப முடியாமல் இருப்பதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் அதிர்வலை
குறிப்பாக, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் அவர் விடுத்த இந்த நேரடி வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவுகளின்படி, அவரது கணவர் இருதய நோய் காரணமாக நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கணவரின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால், டுபாய் மருத்துவமனை ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களது கடவுச்சீட்டையும் பிணையாக வைத்துள்ளது. கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால், அவருக்கும் அவரது குழந்தைக்குமான விசாக்களைப் புதுப்பிக்க முடியாமல் போயுள்ளது.
இதனால் செல்லுபடியாகும் விசா இன்றி எங்கும் வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். மேலும், தங்குமிட வசதிக்காக வழங்கப்பட்ட எதிர்கால திகதியிட்ட காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதில், அவர் மீது சட்ட ரீதியான வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தான் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணுடன் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட பெண் தற்போது அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முறையான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். எமது தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுடன் இணைந்து, உரிய அரச வழிமுறைகள் ஊடாக அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன."
தற்போது அந்தப் பெண்ணுக்கு எதிராக உள்ள நிதி மற்றும் சட்ட ரீதியான பொறுப்புகள் குறித்து அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு நிதி உதவி தேவையில்லை என்றும், பாதுகாப்பாக நாடு திரும்ப அரசாங்கம் உதவி செய்தால் மாத்திரம் போதும் என்றும் அந்தப் பெண் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.