பாடசாலை மாணவர்களுக்கு பெண் விற்பனை செய்த ஆபத்தான பொருள்
வெயங்கொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் , திவுலபிட்டிய பகுதியில் சிறிது காலமாக இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்த வருவதாக திவுலபிட்டிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி நிஹால் திசாநாயக்கவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, திவுலபிட்டிய பகுதியில் உந்துருளியில் வந்து , மரதகஹமுலவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
இலத்திரனியல் சிகரெட்டு
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் இலத்திரனியல் சிகரெட்டுகளை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை ரூ. 5,500 மற்றும் ரூ. 7,500க்கு விற்பனை செய்து வந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் குறித்த பெண்ணையும் நாளை மினுவாங்கொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.